search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாம்கோ மேலாண்மை"

    சிறுபான்மையினருக்கு அரசு கடன் திட்டங்கள் குறித்து அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும் என்று ‘டாம்கோ’ மேலாண்மை இயக்குனர் வள்ளலார் அறிவுறுத்தினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சிறுபான்மையினர் நலத்திட்டங்களை செயல்படுத்தக்கூடிய அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனரும், டாம்கோ மேலாண்மை இயக்குனருமான வள்ளலார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-

    தமிழக அரசால் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தமிழகத்தில் வாழும் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள சிறுபான்மையினர் முன்னேற்றம் அடையும் வகையில் பல்வேறு கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. டாம்கோ நிறுவனத்தின் மூலம் பயனாளிகளுக்கு தனிநபர் கடன், கல்விக்கடன், சுயஉதவிக்குழுக்களுக்கான சிறுகடன் உள்ளிட்ட கடன்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தாய்கோ வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    டாம்கோ திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2017-18-ம் நிதியாண்டில் 252 பேருக்கு ரூ.84 லட்சத்து 37 ஆயிரம் சுயஉதவிக்குழு கடன்கள் வழங்கப்பட்டு உள்ளது. தனிநபர் கடன்களை பயனாளிகளுக்கு வழங்கும்போது சம்பந்தப்பட்ட தொழிலுக்கு கடன் தொகையை பயனாளி பயன்படுத்துவதை அலுவலர்கள் உறுதி செய்வதுடன், பெறப்பட்ட கடன்தொகையை குறிப்பிட்ட கால அளவிற்குள் பயனாளிகளை திருப்பி செலுத்த செய்ய வேண்டும்.

    டாம்கோ திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு மாதமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் விவரம் குறித்து தெரிவிக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் டாம்கோ திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கடன்கள் குறித்து அலுவலர்கள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் தமிழக அரசால் சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை அலுவலர்கள் தகுதியானவர்களுக்கு கொண்டு சேர்க்க முனைப்புடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் மிருணாளினி, ஆவின் பொது மேலாளர் குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி செல்வராஜ், சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    ×